சிவகங்கை பள்ளிவாசலில் மத ஒற்றுமையை வலியுறுத்தி ரத்ததான முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


சிவகங்கை பள்ளிவாசலில் மத ஒற்றுமையை வலியுறுத்தி ரத்ததான முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 March 2020 10:00 PM GMT (Updated: 12 March 2020 9:26 PM GMT)

சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ரத்ததான முகாம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ரத்ததான முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் முன்னிலை வகித்தார். வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அன்வர்பாட்சா வரவேற்று பேசினார்.

முகாமில் வீரமாகாளி அம்மன் கோவில் தலைவர் கண்ணன், செயலாளர் குரு கணேசன், சிவகங்கை மறைமாவட்ட முதன்மைகுரு ஜோசப் லூர்து ராஜா, புனித அலங்கார அன்னை பேராலய தந்தை மரியடெல்லஸ் உள்பட அனைத்து மதத்தினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து மத பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் குறித்து எடுத்துரைத்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் முதல் நபராக ரத்ததானம் வழங்கினார். சிவகங்கை மருத்துவக் கல்லூரி ரத்தவங்கி அலுவலர் டாக்டர் சுகந்தி தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் 60-க்கும் மேற்பட்ேடார் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

நாட்டில் பல இடங்களில் மதத்தை வைத்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மத ஒற்றுமையை வலியுறுத்தி அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பள்ளிவாசலில் ரத்த தானம் வழங்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story