முல்லைப்பெரியாறு அணையில், பென்னிகுவிக் பயன்படுத்திய பொருட்கள் புதருக்குள் கிடக்கும் அவலம் - அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கப்படுமா?


முல்லைப்பெரியாறு அணையில், பென்னிகுவிக் பயன்படுத்திய பொருட்கள் புதருக்குள் கிடக்கும் அவலம் - அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 March 2020 9:45 PM GMT (Updated: 2020-03-13T22:45:47+05:30)

முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமான பணிக்கு பென்னிகுவிக் பயன்படுத்திய பொருட்கள் புதருக்குள் கிடக்கின்றன. அவற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் இந்த அணையை கட்டினார். தென்மாவட்டங்களில் நிலவிய பஞ்சத்தை போக்குவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. அணை கட்டுமான பணிக்காக ஆங்கிலேய அரசு ஒதுக்கிய நிதியை கொண்டு கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில், தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கட்டுமான பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து மேற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு முன்வரவில்லை. இதனால், பென்னிகுவிக் இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று அந்த பணத்தில் முல்லைப்பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தார்.

இந்த அணையின் கட்டுமான பணியின் போது நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். அவர்களுக்காக அணை பகுதியில் கல்லறை அமைக்கப்பட்டு உள்ளது. ஏராளமான மக்களின் உழைப்பாலும், உயிர் தியாகத்தாலும் இந்த அணை உருவாகி உள்ளது. இந்த அணையின் கட்டுமான பணிக்கு சுண்ணாம்பு, கடுக்காய், பதநீர் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிக்கான கலவை எந்திரம் லண்டனில் இருந்து பென்னிகுவிக்கால் வாங்கி வரப்பட்டது. 1887-ம் ஆண்டு இந்த அணை கட்டுமான பணிகள் தொடங்கின. இந்த பணிகளின் போது பென்னிகுவிக் ஒரு இரும்பு படகை பயன்படுத்தினார்.

அணைக்கு தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த இரும்பு படகு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த இரும்பு படகு மற்றும் கலவை எந்திரம் எவ்வித பயன்பாடும் இன்றி, அணை பகுதியில் உள்ள புதருக்குள் கிடக்கிறது. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணையில் பென்னிகுவிக் தங்கிய குடியிருப்பில், அவர் பயன்படுத்திய நாற்காலி உடைந்த நிலையில் கிடக்கின்றன. பென்னிகுவிக்கை கடவுளுக்கு நிகராக தேனி மாவட்ட மக்கள் வணங்கி வருகின்றனர்.

அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்பட அணையின் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்திய பொருட்கள் அணை பகுதியில் கவனிப்பாரற்று கிடப்பதால் அவற்றை பராமரித்து, லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகில் ஓர் அருங்காட்சியகம் அமைத்து அங்கு பாதுகாக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் அணை அமைந்துள்ளதால் அங்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. எனவே, இங்கு புதருக்குள் கிடக்கும் பொருட்களை பராமரித்து, அருங்காட்சியகத்தில் வைத்தால் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏதுவாக இருக்கும். எதிர்கால சந்ததியினரும் அதை பார்த்து அணையின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, இதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Next Story