கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின


கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 13 March 2020 8:12 PM GMT)

குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டுவதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

கடலூர்,

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மண்டல அலுவலகம் கடலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் உள்பட 6 மாவட்டங்கள் வருகிறது. இந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

இதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோ‌‌ஷ்டி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 288 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கடலூரை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகியான அரசு ஒப்பந்ததாரர் ப‌ஷீருல்லா, மற்றொரு நிர்வாகியான விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காமராஜர் சாலையை சேர்ந்த அரசு கட்டிட ஒப்பந்ததாரர் முக்தாஸ் அகமது ஆகியோர் டெண்டர் எடுத்து செய்து வருகிறார்கள்.

இந்த பணிகளில் பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.

பின்னர் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த உத்தரவிட்டனர். அதன்படி நேற்று கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார், பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் மோகன்தாஸ் முன்னிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு பெண்ணாடத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வசித்து வரும் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. வீட்டில் அவரது மனைவி வளர்மதி மட்டும் இருந்தார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பீரோவில் நிறைய ஆவணங்கள் இருந்தன. அதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். பின்னர் ஜெயக்குமார் மனைவி வளர்மதியிடம் விசாரணை நடத்தினர். மதியம் 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் ஜெயக்குமார் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர் அவர்கள் சோதனையை முடித்துவிட்டு வெளியே வந்தனர்.

இதற்கிடையே கடலூர் ஆனைக்குப்பம் ஆர்.வி.எஸ். நகரில் உள்ள ஒப்பந்ததாரர் ப‌ஷீருல்லா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலும், பீச்ரோட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மெல்வின் சிங் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று காலை 6 மணிக்கு சென்று சோதனை நடத்தினர். வீடு, அலுவலகத்தில் உள்ள கதவுகளை பூட்டிவிட்டு தீவிரமாக சோதனையிட்டனர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதை ஆய்வு செய்த பிறகு தான் மோசடி எந்த அளவுக்கு நடந்து உள்ளது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ப‌ஷீருல்லா நிர்வாகியாக உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியானவர் முக்தாஸ் அகமது. இவரது வீட்டின் அருகே தான் இவர்களது நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திலும் நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார்சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை மதியம் 2.30 மணி வரை நடைபெற்றதாகவும், இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story