தியாகதுருகம் அருகே, செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்


தியாகதுருகம் அருகே, செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 9:20 PM GMT)

தியாகதுருகம் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவ்வூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் செல்போன் கோபுரம் அமைக்க பள்ளம் தோண்டினார்கள்.

ஆனால் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அருகில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் செல்போன் கோபுரத்துக்கு பள்ளம் தோண்டும் பணியை நிறுத்துமாறு பொதுமக்கள் கூறினர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 17 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி விட்டனர்.

இதனால் சுவர்களில் விரிசல் விழுந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டினுள் இருக்க அச்சப்பட்டு வெளியே வந்து ஊர்பெரியவர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து நேற்று காலை 7.40 மணி அளவில் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-எஸ்.ஒகையூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர் பெரியவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சாலை மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். பின்னர் அவர்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடினார்கள். இதனால் ஊரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், பல குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரத்தை அமைத்தால் கதிர்வீச்சினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இங்கு பள்ளம் தோண்டியதால் அருகில் உள்ள வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து விட்டன. எனவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

Next Story