மதுரை நிதி நிறுவனத்திடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு டெபாசிட் பணத்தை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை நிதி நிறுவனத்திடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு டெபாசிட் பணத்தை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 13 March 2020 11:15 PM GMT)

நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப பெற்றுத் தர ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்காசி ஆய்குடியைச் சேர்ந்த லியோன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

மதுரையைச் சேர்ந்த அப்சல் அக்ரோ டெக் இந்தியா நிறுவனம் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால் விவசாய நிலம் தருவதாக அறிவித்தது. இதனை நம்பி நெல்லை மாவட்டத்தில் நான் உள்பட பலர் பணம் செலுத்தினோம். 3 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய நிலம் தரப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் நான் 17.8.2015-ல் ரூ.50 ஆயிரம் செலுத்தினேன். ஆனால் அவர்கள் கூறியதை போல 3 ஆண்டுக்கு பிறகு முதிர்வு தொகை அல்லது விவசாய நிலத்தை திரும்ப தரவில்லை.

இந்த மோசடி தொடர்பாக அப்சல் நிறுவனம் மீது மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அப்சல் இந்தியா நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 60 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் டெபாசிட் பணத்தை பெற்று இருந்தது தெரிய வந்தது.

இந்த பணத்தில் தமிழகம் முழுவதும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். எனவே அப்சல் இந்தியா நிறுவனத்தின் சொத்துகளை அடையாளம் கண்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய முதிர்வு தொகை அல்லது அதற்கு சமமான நிலம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்சல் இந்தியா நிறுவனம் சார்பில் வக்கீல் கே.பி.நாராயணகுமார் ஆஜராகி, “அப்சல் அக்ரோ டெக் நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 22 கிளைகள் உள்ளன. மதுரையில் மட்டும் 14 கிளைகள் உள்ளன. சுமார் ரூ.100 கோடி வரை முதலீடு பெறப்பட்டு இருந்தது. முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ.34.21 கோடி அளவுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டது. ரூ.64.35 கோடி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை முறைப்படுத்தும் விதிகள் காரணமாக தொழில் பாதிப்பு ஏற்பட்டது. எங்கள் நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன. இந்த சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக ஐகோர்ட்டே தனி குழுவை அமைக்க வேண்டும்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், “அப்சல் அக்ரோ டெக் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை விற்று, முதலீட்டாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி டி.சுதந்திரம் நியமிக்கப்படுகிறார்.

நிலங்களை விற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு டெபாசிட் பணத்தை 6 மாதத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நீதிபதி டி.சுதந்திரத்துக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், அப்சல் அக்ரோ டெக் நிறுவன மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் உதவியாக இருக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story