பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் ரூ.5¾கோடியில் புதிய பாலம் கட்டும் பணி பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் ரூ.5¾கோடியில் புதிய பாலம் கட்டும் பணி பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 March 2020 11:00 PM GMT (Updated: 14 March 2020 7:44 PM GMT)

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் ரூ.5¾ கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருக்கடையூர்,

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமெய்ஞானம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வடக்குத்தெருவில் உள்ள அம்மனாற்றங்கரையில் காலமநல்லூர் ஊராட்சிக்கு செல்ல சிறிய பாலம் உள்ளது. இந்த வழியாக அப்பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதியில் உள்ள கிடங்கல், மாமாகுடி, ஆக்கூர், சின்னமேடு, சின்னங்குடி, மருதம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கு திருக்கடையூரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக மேற்கண்ட பகுதியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பிள்ளைபெருமாள்நல்லூர், காலமநல்லூர் ஊராட்சிகளை இணைக்கும் வகையில் ரூ.5 கோடியே 85 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணியின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய பாலத்தின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

தடுப்பணை கட்ட கோரிக்கை மனு

இதையொட்டி கணபதி ஹோமம் மற்றும் பூமி பூஜையை கணேச குருக்கள், மகேஷ் குருக்கள் செய்தனர்.. பின்னர் எம்.எல்.ஏ.விடம் மேற்கண்ட பகுதி மக்கள் அம்மனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தர கோரி மனு கொடுத்தனர்.

இதில் அ.தி.மு.க. செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனிசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கபடி பாண்டியன், ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராமலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், ஊராட்சி செயலாளர் மதியழகன், ஊராட்சி பொறியாளர் சோமசுந்தரம், சாலை ஆய்வாளர் மணிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story