தூத்துக்குடியில் மீனவர்களின் கரைவலையில் நெத்திலி, சாளை மீன்கள் பிடிபட்டன
தூத்துக்குடியில் மீனவர்களின் கரைவலையில் நெத்திலி, சாளை மீன்கள் பிடிபட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மீனவர்களின் கரைவலையில் நெத்திலி, சாளை மீன்கள் பிடிபட்டன.
கரைவலை
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், தூத்துக்குடி கடற்கரையோரத்தில் கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன்பிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்கள் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர். இந்த முறையில் சிறிய படகில் கடலுக்குள் சிறிது தூரம் சென்று வலையை விரிப்பார்கள். வலையின் இரு முனையும் கரையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வார்கள்.
அம்பா பாடல்
சிறிது நேரத்துக்கு பிறகு வலையின் இருமுனைகளையும் பிடித்து கரையில் இருந்தபடி வலையை இழுப்பார்கள். அப்போது வலையில் சிக்கி உள்ள மீன்கள் மட்டுமின்றி, விரிக்கப்பட்ட வலைக்கு நடுவே உள்ள மீன்களும் கரைக்கு வந்து சேர்ந்து விடும். இந்த வலையை இழுப்பதற்காக மீனவர்கள் “அம்பா“ என்னும் ஒரு வகை பாடலை பாடுவதும் வழக்கம். பாடலை பாடிக்கொண்டே வலையை இழுப்பார்கள்.
நேற்று முன்தினம் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் வழக்கம் போல் கரைவலை மூலம் மீன்பிடித்தனர். ஒரே நேரத்தில் 3 இடங்களில் கரைவலை இழுத்தனர். அப்போது வலையில் ஏராளமான நெத்திலி, சாளை, காரல் மற்றும் பாறை உள்ளிட்ட மீன்கள் பிடிபட்டன. அதன்பிறகு மீனவர்கள் தரம் வாரியாக மீன்களை பிரித்து விற்பனை செய்தனர்.
நெத்திலி மீன்கள்
இதுகுறித்து கரைவலை மீனவர் மலைச்சாமி கூறும் போது, தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் கரைவலை மூலம் நீண்டகாலமாக மீன்பிடித்து வருகிறோம். சுனாமிக்கு முன்பு கரைவலையில் குறைந்தது 50 டன் முதல் அதிகபட்சமாக 100 டன் வரை மீன்கள் பிடிபடும். இதனால் அதிக வருவாய் கிடைத்தது. சுனாமிக்கு பிறகு மீன்கள் மிகவும் குறைந்து விட்டன. அதே நேரத்தில் கரைவலை தொழிலாளர்களும் குறைந்து விட்டனர். இந்த வலையை அம்பா பாடலை பாடிக்கொண்டு, 50 முதல் 100 பேர் வரை சேர்ந்து இழுப்பார்கள். அந்த அளவுக்கு மீன்கள் கிடைத்து வந்தன. தற்போது மீன்கள் குறைந்து உள்ளது.
தற்போது வலையில் நெத்திலி, சாளை மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளன. அதே போன்று காரல், சீலா, வாளை, கொடுவா, சமயன் ஆகிய மீன்களும் பிடிபட்டு உள்ளன. மொத்தம் சுமார் ரூ.15 ஆயிரம் வரை மீன்கள் கிடைத்து உள்ளன. தினமும் கரைவலையை இழுக்க மாட்டோம். கடற்கரையோரம் தண்ணீரை பார்க்கும் போதே, மீன்கள் உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடுவோம். கடற்கரையோரத்தில் மீன்கள் இருந்தால் தண்ணீரின் நிறத்தில் உள்ள மாற்றத்தை வைத்து அறிந்து கொள்வோம். அப்போது வலைவிரித்து மீன்பிடிப்போம். தற்போது அதிக அளவில் மீன்கள் கிடைக்கவில்லையென்றாலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் போதுமான அளவுக்கு மீன்கள் கிடைத்து வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story