தாய் கண்டித்ததால் இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் தீக்குளித்து சாவு


தாய் கண்டித்ததால் இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 15 March 2020 11:45 PM GMT (Updated: 15 March 2020 8:55 PM GMT)

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் மாயமாகி சென்றதை தாய் கண்டித்ததால், ஆத்திரத்தில் இளம்பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ஜெயரூபா. இவரது மகள் சுமித்திரா (வயது 28).

சுமித்திராவுக்கும் அதே முகாமைச்சேர்ந்த பத்தி நாதன் (33) என்பவருக்கும் திருணமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் ஜெயரூபா வீட்டில் குழந்தைகளோடு சுமித்திரா வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி சுமித்திரா தனது தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை ஜெயரூபா பல இடங்களில் தேடிவந்த நிலையில், சுமித்திரா, கவரைப்பேட்டையில் உள்ள ஒருவருடன் வசித்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கடந்த 13-ந்தேதி கவரைப்பேட்டைக்கு சென்ற ஜெயரூபா, தனது மகள் சுமித்திராவை அங்கிருந்து முகாமில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

மேலும், 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை விட்டு வேறு யாருடனோ சென்று வசிப்பது தவறு என்று கூறி கண்டித்து சுமித்திராவை, ஜெயரூபா வீட்டுக்கு அழைத்து உள்ளார்.

இதனால் தாய் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த சுமித்திரா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது சுமித்திராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜெயரூபா மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்து சுமித்திராவின் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அதன் பின்னர், உடனடியாக அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story