குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முத்துப்பேட்டையில் சிறுவர், சிறுமிகள் ஊர்வலம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முத்துப்பேட்டையில் சிறுவர், சிறுமிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 9:46 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முத்துப்பேட்டையில் சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் நடத்தினர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் தேசிய கொடி மற்றும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். எதிர்ப்பு குறித்த வாசகம் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், நியூபஜார், பட்டுக்கோட்டை சாலை வழியாக புதுத்தெரு திடலை சென்று அடைந்தது. இதில் முத்துப்பேட்டையில் உள்ள பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர்

அதேபோல கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஊர்வலம் சென்றனர். கூத்தாநல்லூர் பெரியபள்ளி வாசலில் தொடங்கிய இந்த ஊர்வலம் பெரியத்தெரு, மேலக்கடைத்தெரு, ஆஸ்பத்திரி சாலை, லெட்சுமாங்குடி கடைவீதி சாலை வழியாக சென்று ஏ.ஆர். சாலையில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று 30-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story