கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; கலெக்டர் பேட்டி


கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 17 March 2020 4:00 AM IST (Updated: 16 March 2020 8:48 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்‌ஷினி கூறினார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமை தாங்கி கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், சுகாதாரம், போக்குவரத்து, வருவாய்த்துறை, உள்ளாட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் திவ்யதர்‌ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில், சர்ச், மசூதி, ரெயில்வே நிலையம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை மக்களும் தவிர்க்க வேண்டும்.

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் போக்குவரத்து துறை ஆகியோர் மூலம் கூட்டாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீதிகள், பொது இடங்களில் மாணவர்கள், குழந்தைகள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் நபர்கள் வழக்கம்போல் பணிக்குச் சென்று வந்தால் போதுமானது. மேலும் ஓட்டல், பார்ட்டி போன்ற பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறுகையில், கொரோனா குறித்து பொதுமக்களிடம் பீதி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story