ராயபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 50 பேர் கைது


ராயபுரத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்   50 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 6:26 PM GMT)

ராயபுரத்தில் சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர், 

சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன்பேட்டை, ஆட்டுத்தொட்டி, மஸ்தான் கோவில் தெரு, மார்டன் லைன், கல்லறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் ராய புரம் தொப்பை தெருவில் சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த சமுதாய நலக்கூடத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் மற்றும் அம்மா உணவகம் ஆகியவை அரசு சார்பில் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சமுதாய நலக்கூடத்தில் நடத்த முடியவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை ராயபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புசெழியன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சமுதாய நலக்கூடத்தை மீண்டும் சரிசெய்து அந்த பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமுதாய நலக்கூடத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், சிமென்ட்ரி சாலை-தொப்பை தெரு சந்திப்பு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராயபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story