போடியில் பயங்கரம்: கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்


போடியில் பயங்கரம்: கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 17 March 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

போடியில் கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

போடி,

கேரள மாநிலம் பி.எல்.ராம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கையா மகன் ராஜா (வயது 30). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். போடி நந்தவனம் தெருவை சேர்ந்த ஜெயராஜ் மனைவி வளர்மதி (30). இவரும் கணவரை பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

வளர்மதிக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டம் பி.எல்.ராம் கிராமத்தில் உள்ளது. இந்த தோட்டத்துக்கு வளர்மதி அடிக்கடி ராஜாவின் காரில் செல்வது வழக்கம். அப்போது வளர்மதிக்கும், ராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறியது.

இதற்கிடையே ராஜாவுக்கும், வேறு ஒரு நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவரை வளர்மதி சென்று பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா வளர்மதியுடன் தகராறு செய்தார். மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் ராஜாவை, கொலை செய்ய வளர்மதி திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு வளர்மதி தனது வீட்டுக்கு வருமாறு ராஜாவை அழைத்தார். இதையடுத்து அவர், வளர்மதி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ராஜா மீது வளர்மதி மிளகாய் பொடியை தூவினார். இதில் நிலைகுலைந்து போன ராஜாவை தான் வைத்திருந்த அரிவாளால் வளர்மதி சரமாரியாக வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ராஜா ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், போடி நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கைது செய்தனர். கள்ளக்காதலனை பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story