கொரோனா முன் எச்சரிக்கை: திருவிழாக்களை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்


கொரோனா முன் எச்சரிக்கை: திருவிழாக்களை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 March 2020 9:45 PM GMT (Updated: 16 March 2020 8:25 PM GMT)

பொதுமக்கள் கூடும் போராட்டங்கள், திருவிழாக்களை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

விருதுநகர், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கண்ணன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் எடுக்க வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முறையாக கைகழுவுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி கிராமங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜபாளையம் பகுதி கேரள மாநிலத்தை ஒட்டி உள்ளதால் அங்கு 31-ந் தேதி வரை தியேட்டர்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் விடுமுறை விடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு 4 பஸ்கள் சென்று வரும் நிலையில் அந்த பஸ்கள் அங்கிருந்து வந்தவுடன் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொல்லத்தில் இருந்து வரும் ரெயில் ராஜபாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்தவுடன் ரெயில்பெட்டிகள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்க நகரசபை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் போராட்ட களம் மற்றும் திருவிழாக்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகிலேயே மருத்துவ மையங்கள் அமைத்து தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்போர் கோவில்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பங்குனி பொங்கலையொட்டி நடைபெறும் பொருட்காட்சிகள் தொடர்பாக வருகிற 31-ந்தேதிக்கு பின்பு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் தொடங்கப்படுவதாக இருக்கும் பொருட்காட்சி தொடக்க விழாவினை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்,

முன்னதாக ஆலோசனை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளுக்கும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கும் கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story