கர்நாடகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை 6 மாவட்டங்களில் சுற்றுலாதலங்கள் மூடப்பட்டன


கர்நாடகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு   தடுப்பு நடவடிக்கை குறித்து  கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை   6 மாவட்டங்களில் சுற்றுலாதலங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 16 March 2020 11:15 PM GMT (Updated: 16 March 2020 10:39 PM GMT)

கர்நாடகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று காணொலி காட்சி மூலம் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு எடியூரப்பா கூறுகையில், கர்நாடகத்தில் மைசூரு, குடகு உள்பட 6 மாவட்டங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

பெங்களூரு,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 110-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.

கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை

இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கலபுரகியை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மருத்துவ கல்வி மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவெத் அக்தர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

கண்காணிக்க வேண்டும்

கர்நாடக அரசு கடந்த 13-ந் தேதி பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை குறித்த காலம் வரை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். மண்டியா, மைசூரு, விஜயாப்புரா, பல்லாரி, கொப்பல், குடகு ஆகிய மாவட்டங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கலெக்டர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள் தினமும் கூடி கொரோனா குறித்து ஆலோசித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத பகுதிகளில் தனியார் மருத்துவமனைகளின் உதவிகளை பெற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

செயற்கை சுவாச கருவிகள்

கர்நாடக மருந்து நிறுவனத்திடம் இருந்து தேவையான மருந்துகளை கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பீதர், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்கள், கூடுதலாக செயற்கை சுவாச கருவிகள் வேண்டும் என்று கேட்டுள்ளன. அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மங்களூரு, கலபுரகியில் கொரோனா வைரஸ் ஆய்வகங்கள் திறக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளோம்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்போது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்று கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள், மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். பெங்களூருவில் அதிக மருத்துவ வசதிகள் ஏற்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் மேலும் ஒருவரை தாக்கியுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இதுவரை 6 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டனர். ேமலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் மேலும் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 8-ந் தேதி அமெரிக்காவில் இருந்து ஒரு ஊழியர் தனது மனைவி, குழந்தையுடன் பெங்களூரு வந்தார். அவர்கள் மூன்று பேருக்கும் அந்த வைரஸ் தாக்கியது.

அவர்களுடன் வந்த 32 வயது இளைஞருக்கு அறிகுறி இருந்தது. இதையடுத்து அவரை வீட்டில் தனிமைபடுத்தி கண்காணித்து வந்தோம். அவரது ரத்தம், சளி மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதன் முடிவு இன்று (அதாவது நேற்று) வந்துள்ளது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை ஒரு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story