பட்டா வழங்கவில்லை, ஆக்கிரமிப்பு அகற்றவில்லை; கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி


பட்டா வழங்கவில்லை, ஆக்கிரமிப்பு அகற்றவில்லை; கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 March 2020 3:30 AM IST (Updated: 17 March 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

பட்டா வழங்க வில்லை, ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்ற காரணத்தால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். இந்த கூட்டத்திற்கு திருமங்கலம் அருகே உள்ள கரிசல்காளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்ற விவசாயி வந்திருந்தார்.

அவர் ஏற்கனவே வீட்டு மனை பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்து இருந்தார். ஆனால் அவருக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே அவர் நேற்று தீக்குளிக்கும் முடிவுடன் கையில் டீசல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

பின்னர் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த டீசலை எடுத்து தன் மீது ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அலறினர்.

இவர்களது சத்தம் கேட்டு அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து மணிகண்டனிடம் இருந்து கேனையும், தீப்பெட்டியையும் பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீசார் தல்லாகுளம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் மதுரை சின்னக்கண்மாய் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (43). இவர் கண்மாய் மற்றும் ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல முறை மனு கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த ரவிச்சந்திரன், நேற்று மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரிடம் இருந்து கேனை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக ரவிச்சந்திரனை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Next Story