துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
20 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
கடந்த ஜனவரி மாதம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி பங்கேற்றதாக கூறி விஜயன், டோம்னிக், சாந்தி, மீனாட்சி உள்பட 20 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
இதனை கண்டித்தும், அவர்கள் 20 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க கோரியும், திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மையத்தின் சம்மேளன பொதுச்செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் ஜி.கே. ராமர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் நடந்த இந்த போராட்டத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா, செயலாளர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது 20 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் வரை போராட்டம் தொடரும், இது தொடர்பாக ஆணையர் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் தொழிற்சங்க பிரதிநிதிகள் 5 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று மாலை வரை அவர்களது போராட்டம் தொடர்ந்தது. கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் இரவிலும் போராட்டம் நடத்தப்போவதாக சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story