போளூர் அருகே சொத்து தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; அண்ணன்-தம்பிக்கு 2 ஆண்டு கடுங்காவல்


போளூர் அருகே சொத்து தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; அண்ணன்-தம்பிக்கு 2 ஆண்டு கடுங்காவல்
x
தினத்தந்தி 17 March 2020 9:30 PM GMT (Updated: 17 March 2020 8:16 PM GMT)

போளூர் அருகே சொத்து தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அண்ணன் - தம்பிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணா மலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை,

போளூர் தாலுகா சனிக்காவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மார்க்கபந்து (வயது 30). இவரது குடும்பத்துக்கும், மட்டப்பிறையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் தொழிலாளியான சந்திரசேகர் என்பவரின் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி மார்க்கபந்துவின் தம்பி தமிழ்ச்செல்வன் (18) சனிக்காவாடியை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் நிலத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரசேகர் (31) மற்றும் அவரது உறவினர்களான மட்டப்பிறையூரை சேர்ந்த மண்ணு என்பவரின் மகன்கள் செல்வகுமார் (40), மோகன் (29) ஆகியோர் கம்பு மற்றும் இரும்பு ராடால் தமிழ்ச்செல்வனை தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மார்க்கபந்து கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர், செல்வகுமார், மோகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார். இதில் தமிழ்ச்செல்வனை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக சந்திரசேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதேபோல் செல்வகுமாருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், மோகனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அவர்கள் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story