கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தலையில் முக்காடு போட்டு இளைஞர்கள் போராட்டம் வைப்பாற்றில் மணல் கடத்தலை தடுக்க கோரிக்கை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
வைப்பாற்றில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலையில் முக்காடு போட்டு...
வைப்பாறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வீரசுதாகர் தலைமையில் இளைஞர்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், எட்டயபுரம் தாலுகா அயன்ராசாபட்டி, கைலாசபுரம் ஆகிய கிராமங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றதாக கூறி, சிலர் அங்குள்ள வைப்பாற்றில் இருந்து மணலை கடத்தி செல்கின்றனர். இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
குடியேறும் போராட்டம்
எனவே வைப்பாற்றில் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.
மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story