மண்டபங்களில் திருமண பதிவின்போது மணமக்களின் ஆதார் அட்டையை கட்டாயம் பெற வேண்டும்; மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு


மண்டபங்களில் திருமண பதிவின்போது மணமக்களின் ஆதார் அட்டையை கட்டாயம் பெற வேண்டும்; மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 4:00 PM GMT)

மண்டபங்களில் திருமண பதிவின்போது மணமக்களின் ஆதார் அட்டையை கட்டாயம் பெற வேண்டும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட அளவில் சைல்டுலைன் ஆலோசனை கூட்டம், குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆகியவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், குழந்தைகள் நலக்குழும தலைவர் சிவக்கலைவாணன், சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ேஹண்ட் இன் ஹேண்ட் இந்தியா பொதுமேலாளர் பிரேம்ஆனந்த் வரவேற்றார்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி பேசியதாவது:-

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக அவசர இலவச தொலைபேசி சேவை சைல்டுலைன் (1098) இந்தியாவில் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்ட சைல்டுலைனுக்கு கடந்தாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கடந்த பிப்ரவரி 29-ந் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து 724 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 175 அழைப்புகள் குழந்தை திருமணம் தடுப்பது தொடர்பானவை. அதன்பேரில் 101 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள அழைப்புகள் பொய்யான தகவல், முகவரி கண்டுபிடிக்க முடியாதவை, 18 வயது நிரம்பிய பெண்கள் உள்ளிட்டவைகள் ஆகும்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கிராமப்புற பகுதிகளில் குழந்தைகள் நலன்சார்ந்த சட்டங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை இரவு நேரத்தில் தடுத்து, அந்த குழந்தையை மீட்டு உடனடியாக அரசு இல்லங்களில் சேர்க்கும் நிலை காணப்படுகிறது. இதற்கு இல்ல பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் குழந்தையை அரசு இல்லங்களில் சேர்க்கும்வரை போலீசாரும் உடனிருக்க வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் திருமணங்களை பதிவு செய்யும்போது மணமக்களின் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்று, பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மகளிர் கோர்ட்டு நீதிபதி ராம்குமார் கலந்து கொண்டு குழந்தை திருமணம் தடுப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டுலைன் பணியாளர்கள், குழந்தைநலன் சார்ந்த துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story