கடிதம் எழுதி வைத்துவிட்டு வனக்காவலர் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது


கடிதம் எழுதி வைத்துவிட்டு வனக்காவலர் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது
x
தினத்தந்தி 18 March 2020 9:00 PM GMT (Updated: 18 March 2020 8:11 PM GMT)

சாக்கோட்டை அருகே வனக்காவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே சாக்கவயல் ஊராட்சி காட்டுக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 55). இவர் கொடைக்கானல் வனத்துறையில் வனக்காவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சக்தி(42) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் நாச்சியப்பன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

தற்போது சக்தியின் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் நாச்சியப்பன் கொடைக்கானலில் இருந்து காட்டுக்குறிச்சிக்கு வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே உள்ள கோவிலில் நாச்சியப்பன் படுத்திருந்தார்.

மறுநாள் காலையில் அந்த கோவிலில் பார்த்தபோது அவர் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிப்பார்த்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே நாச்சியப்பன் பிணமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் நாச்சியப்பன் அணிந்திருந்த சட்டையில் இருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், தனது இறப்புக்கு முதல் மனைவி சக்தி தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைதொடர்ந்து போலீசார், நாச்சியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மகளின் திருமண தேவைகள் குறித்து கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதில் அவர் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நாச்சியப்பன் முதல் மனைவி சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story