ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்: ‘பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’


ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்: ‘பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’
x
தினத்தந்தி 20 March 2020 12:00 AM GMT (Updated: 19 March 2020 8:31 PM GMT)

‘யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்றும், ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவுறுத்தி உள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. எனினும் இன்னும் 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து தொடர்பு கொள்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு டாக்டர் தலைமையில் குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை எந்த கூட்டங்களும், போராட்டங்களும் நடத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களை நேரில் சந்திக்கும் போது மக்களை கூட்டமாக சந்திக்க கூடாது. மேலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் கைகளை சுத்தம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு கைகளை சுத்தம் செய்ய பயன்படும் திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அங்கன்வாடிகள் மூடல்

குமரி மாவட்டத்தில் 1,400 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுவிட்டன. சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது. மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை ஆகியவை மூடப்பட்டுள்ளன. கோவில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் மக்கள் கூட்டம் கூடாத வகையில் நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தி உள்ளோம். பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட்டுகள், ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. அதோடு மக்கள் கூடும் இடங்களையும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தங்கும் விடுதிகளில் புதிதாக யாரும் முன் பதிவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

குமரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 78 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சிலருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்

குமரி மாவட்டத்துக்கு தினமும் 26 ரெயில்கள் வந்து செல்கின்றன. அந்த ரெயில்களை தினமும் சுத்தம் செய்து வருகிறோம்.

இதே போல் மாவட்டம் முழுவதும் இயக்கப்படும் பஸ்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் 155 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 139 கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. மருத்துவ கல்லூரிகள் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகள் மட்டும் செயல்படுகின்றன. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய நோய் ஆகும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் வைரசை கட்டுப்படுத்த முடியும்.

எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். உறவினர் வீடுகளுக்கோ, நண்பர் வீடுகளுக்கோ செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் வாங்க வீட்டில் ஒருவர் மட்டும் வெளியே செல்ல வேண்டும். வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்போது கை, கால்களை சுத்தப்படுத்தி விட்டு வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

மெத்தனம் கூடாது

காய்ச்சல், சளி இருந்தால் தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு இருந்து விடக்கூடாது. உடனே டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்குவது தொடர்பாக மருந்து கடைகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளோம். இதுவரை வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது.

ஈரானில் தவிக்கும் மீனவர்கள்

ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக கூறுகிறீர்கள். வைரஸ் தொடர்பாக எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் கூட்டமாக கூடுவது நல்லது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, வருவாய் அதிகாரி ரேவதி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி மற்றும் பலர் இருந்தனர்.


Next Story