சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது: மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்தி நகர் 11-வது தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 20). வெல்டிங் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (21). லேத் பட்டறையில் பணியாற்றி வந்தார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை வீட்டில் இருந்து மேடவாக்கத்துக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். மேடவாக்கம் மெயின்ரோடு வழியாக கோவிலம்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது மோதியது.
இதில் சுபாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சூர்யாவை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சூர்யா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான சுபாஷ், சூர்யா இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story