கர்நாடகத்தில் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; சாலைகள் வெறிச்சோடின


கர்நாடகத்தில் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 22 March 2020 11:52 PM GMT (Updated: 22 March 2020 11:52 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்தில் நேற்று மக்கள் ஊரடங்கிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். ரெயில், பஸ்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

பெங்களூரு,

சீனாவில் கோரதாண்டவமாடிய கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகத்தை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தநோய் தாக்கி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி மார்ச் 22-ந்தேதி (அதாவது நேற்று) ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி நேற்று கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் சுமார் 99 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பஸ்கள், ரெயில்கள் ஓடவில்லை. பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேைவ நிறுத்தப்பட்டது. ஆட்டோக்கள், கார்கள் இயங்கவில்லை. கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

வீடுகளுக்குள் முடங்கினர்

பெங்களூருவை பொறுத்தவரை மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், லால்பாக், கப்பன் பார்க், விதானசவுதா ரோடு, சாந்திநகர், எம்.ஜி. ரோடு, மடிவாளா, கோரமங்களா, ேக.ஆர்.மார்க்கெட், ராஜாஜிநகர், விஜயநகர் உள்பட பெங்களூரு மாநகர் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின. இதனால் மக்களும் வீட்டுக்குள் முடங்கிபோய் இருந்தனர். வழக்கமாக வாரஇறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கடை வீதிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

ஆனால் நேற்று மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகள், வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளில் ஓரிரு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தென்பட்டன. நகரின் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், நகரில் வலம் வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

வெறிச்சோடிய சாலைகளில் சாகசம்

ஆனால் சில இடங்களில் வெறிச்சோடிய சாலைகளில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. அத்தகையவர்களை போலீசார் எச்சரித்தனர். அரசு-தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

சில இடங்களில் பால் விற்பனை செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. 1¼ கோடி மக்கள்தொகை கொண்ட பெங்களூருவில் எப்போதும் மக்கள் நெரிசல் இருக்கும். ஆனால் நேற்று வெளியில் நடமாடிய மக்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தது.

கைகளை தட்டி கவுரவிப்பு

இதே நிலை தான் மைசூரு, தட்சிணகன்னடா, சிவமொக்கா, கோலார், ராமநகர், மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் நீடித்தது. இதனால் மாநிலம் முழுவதும் வாகன சத்தம் உள்பட எந்த ஒரு ஒலி சத்தமும் கேட்கவில்லை. எந்தவித ஆரவாரமுமின்றி மயான அமைதி நிலவியது. கர்நாடகம் முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தபடி டி.வி. சேனல்களில் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை பார்ப்பதிலேயே மூழ்கி கிடந்தனர். கர்நாடகத்தை பொறுத்தவரை நேற்று மக்கள் ஊரடங்குக்கு கர்நாடகத்தில் முழு ஆதரவு கிடைத்தது.

பிரதமர் மோடி வேண்டுகோளின் படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார், பல்வேறு துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் மாலை 5 மணி அளவில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து கைகளை தட்டி ஒலி எழுப்பினர்.

கர்நாடகத்தில் ஆதரவு

இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகள், பிரபல டாக்டர் தேவிஷெட்டி ஆகியோருடன் முதல்-மந்திரி பெங்களூருவில் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில் கர்நாடகத்தில் மக்கள் ஊரடங்குக்கு கர்நாடக மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதற்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கர்நாடகத்தில் நகரங்களில் வசிக்கும் கிராமத்தினர், அடுத்த 15 நாட்களுக்கு சொந்த ஊருக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகளை பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைப்பு

கர்நாடகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளை அதாவது எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கர்நாடகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல் வருகிற 27-ந் தேதி தொடங்கவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. உள்பட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் விக்டோரியா ஆஸ்பத்திரியில் 1,700 படுக்கைகள், கொரோனா வைரஸ் பாதிக்கும் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள். மாநிலம் முழுவதும் அனைத்து தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள பாலபுரி விருந்தினர் மாளிகை, கொரோனா போர் அலுவலகமாக செயல்படும். அங்கிருந்து எனது தலைமையில் கொரோனா தொடர்பான அனைத்து விஷயங்களும் கண்காணிக்கப்படும். இந்த போர் அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும்.

200 பேருக்கு பரிசோதனை

கர்நாடக அரசின் செயல்படை கூட்டங்கள் மற்றும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துதல் போன்ற அனைத்தும் அங்கிருந்தபடியே ஆலோசிக்கப்படும். பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவை இல்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். இந்த அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்கப்படும். அந்த வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். 10 லட்சம் பேரில் 200 பேருக்கு பரிசோதனை செய்யும் வகையில் ஆய்வக வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.

ஆய்வக வசதிகள்

ஐ.சி.எம்.ஆர்., என்.ஐ.வி. ஆகிய அமைப்புகளின் உதவியுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆய்வக வசதிகள் ஏற்படுத்த அனுமதி பெற முடிவு செய்துள்ளோம். மந்திரிகளை உள்ளடக்கிய செயல்படை ஏற்கனவே செயல்பட தொடங்கிவிட்டது.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Next Story