தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்து வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்த வந்த 120 பேர், அவர்களின் வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்த 30 பேரின் விவரங்களை சேகரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளிநாடு சென்று வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கண்காணிப்பில் உள்ள அனைவருக்கும் தினமும் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சுகாதார துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை மற்றும் முக்கிய அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
நாளைக்கு (இன்று) அமல்படுத்தப்பட உள்ள 144 தடை உத்தரவினால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு எந்த தடையும் இல்லை. தேவைப்பட்டால் காய்கறி மார்க்கெட் 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் தான் பொதுமக்கள் வெளியே வர வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள் வெளியே விளையாடுகிறார்கள். கொரோனா பாதுகாப்பு குறித்து மக்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். பொதுமக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தால் தான் நோயை தடுக்க முடியும். குழந்தைகளை வெளியே விடக்கூடாது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இதற்காக 100 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 படுக்கைகள் கொண்ட மற்றொரு பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம், காயல்பட்டினம் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு இருக்கிறது. இது 70 படுக்கைகள் கொண்ட பிரிவாக மாற்றப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய அரசு ஆஸ்பத்திரிகளில் ஒன்றை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்குவங்கமாநிலத்தில் இருந்து ரெயில்வே பணிக்காக வந்த 3 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்கள் பணிக்கு வந்தபோதே இந்த அறிகுறிகள் இருந்துள்ளது. அவர்கள் 3 பேரும் நன்றாக உள்ளனர். அவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவு வர ஒருநாள் ஆகும். அதன் பின்னரே கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அவர்களுடன் வந்த மற்ற தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அனிதா, நகரசபை ஆணையாளர் ராஜாராம், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story