கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் குறைந்த அளவு விமானங்களே இயக்கம்
கொரோனா வைரஸ் பீதியால் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு விமானங்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் பீதியால் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வர தடை உத்தரவு மற்றும் அச்சம் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பன்னாட்டு விமான சேவை குறைந்தது. மேலும் மத்திய அரசு உத்தரவின்பேரில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு வார காலத்துக்கு விமான சேவைகள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதனால் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தினமும் வரவேண்டிய 57 விமானங்களும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 57 விமானங்களும் என 114 பன்னாட்டு விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 196 புறப்பாடு விமானங்கள், 196 வருகை விமானங்கள் என மொத்தம் 392 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உள்நாட்டு விமான சேவை குறைக்கப்பட்டு சென்னையில் இருந்து 77 புறப்பாடு விமானங்களும், 81 வருகை விமானங்களும் என 158 விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், அந்தமான், ஆமதாபாத், லக்னோ, கோவா, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு நேற்று விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் அந்த விமானங்களிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் இருந்தனர்.
உள்நாட்டு முனையம் வந்த பயணிகள் அனைவருமே முகக்கவசங்கள் அணிந்துகொண்டு, ஒருவித அச்ச உணர்வுடனேயே விமானத்தில் பயணம் செய்கின்றனர். அதோடு வருகை பயணிகள் அனைவரையும் விமான நிலைய சிறப்பு மருத்துவ குழுவினர் நவீன கருவிகள் மூலம் தீவிர பரிசோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கிறார்கள்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு செல்லவேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் எந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு, அதில் இருந்த பயணிகள் 289 பேரும் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதன்பின்பு அந்த விமானத்தில் பழுது பார்க்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு தடை காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மத்திய அரசின் சிறப்பு அனுமதியை பெற்று கத்தார் விமானம் 289 பயணிகளுடன் நேற்று காலை பன்னாட்டு முனையத்தில் இருந்து தோகா புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story