கொரோனா வைரஸ் எதிரொலி; தர்பூசணி, முலாம் பழம் விலை சரிவு - வியாபாரிகள் கவலை
கொரோனா வைரஸ் எதிரொலியால் தர்பூசணி, முலாம் பழம் விலை சரிவடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர்,
வெயிலுக்கு பேர் போன ஊரான வேலூருக்கு அடுத்தபடியாக திருப்பத்தூரில் வெயில் சுட்டெரிக்கும். இக்கால கட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் தர்பூசணி, முலாம் பழம் வியாபாரம் வெகு ஜோராக நடைபெறும். இந்த ஆண்டும் வெயில் தொடங்கியவுடன் திருப்பத்தூரில் ஆங்காங்கே ஏராளமான தர்பூசணி கடைகள் தொடங்கப்பட்டன.
திண்டிவனம், மேல்மருவத்தூர் பகுதிகளில் இருந்து திருப்பத்தூர் பழ மார்க்கெட்டுக்கு தினமும் 2 முதல் 3 லோடு தர்பூசணி பழம் வந்தது. இதேபோல சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்தும், ஆந்திர மாநில பகுதியில் இருந்தும் தினமும் 3 லோடு முலாம் பழம் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை ஒரு லோடு மட்டுமே வருகிறது. கடந்த ஆண்டு தர்பூசணி பழம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு கிலோ ரூ.8 முதல் 10 வரை மட்டுமே விற்க முடிகிறது. இதேபோல முலாம் பழம் கிலோ ரூ.60 முதல் 70 வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகள் திறக்கப்படவில்லை. நகரில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. ஆகையால் தர்பூசணி, முலாம் பழம் வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story