கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு தோல்வி சித்தராமையா குற்றச்சாட்டு


கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு தோல்வி சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 6:38 PM GMT)

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு, 

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஒத்திவைக்க வேண்டும்

கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க மாநில அரசு அனைத்து மாவட்டங்களையும் மூடியுள்ளது. 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இது யுகாதி பண்டிகை நேரம் என்பதால், பொருட்கள் வாங்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது தவிர்க்க முடியாது. இதற்கும் அனுமதிக்காவிட்டால் எப்படி?. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் சாலைகளில் நடமாடும் சிலர் மீது தடியடி நடத்தி விரட்டுவது தவறு. கொரோனா பரவுவதை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா பரவுவதால் நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரையும் ஒத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

எங்களின் விருப்பம்

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்க ஆதரவு வழங்குகிறோம், அனைத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் உறுதியளித்தோம். ஆனால் மாநில அரசு, வருகிற 27-ந் தேதி கூட்டத்தொடரை நடத்துவதாக கூறியது. கொரோனா பரவி வரும் நெருக்கடியான சூழ்நிலையில் நிதி மசோதாவை மட்டும் நிறைவேற்றுமாறு நாங்கள் கூறினோம்.

ஆனால் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டத்துறை மந்திரி மாதுசாமி தாக்கல் செய்தார். இத்தகைய மசோதா மீது விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இதில் அரசு அவசரம் காட்டுவது சரியல்ல.

ஆட்சேபனை தெரிவித்தோம்

இதற்காக தான் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். சபாநாயகர் தலையிட்டு, நிதி மசோதாவுக்கு மட்டும் ஒப்புதல் பெறுமாறு கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. சபாநாயகர் ஒருதலைபட்சத்துடன் செயல்படுகிறார். இந்த அரசு செய்வது சரியல்ல.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story