கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்: 21 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிதி உதவி சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு


கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்: 21 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிதி உதவி சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 6:54 PM GMT)

கர்நாடகத்தில் 21 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று சட்ட சபையில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 21 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று சட்ட சபையில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

கடன் தள்ளுபடி

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி பட்ெஜட்டை முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் 17-வது மற்றும் கடைசி நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்து பேசினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகி பரவி வருகிறது. இதனால் முந்தைய கூட்டணி ஆட்சியில் தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.13.20 கோடி கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரத்து 720 பேர் பயன் அடைவார்கள். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஒரே நேரத்தில் 2 மாதங்களுக்கு வழங்கப்படும்.

தலா ஆயிரம் ரூபாய்

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் 21 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தற்போது தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை ஒரே நேரத்தில் வழங்குகிறோம்.

கர்நாடகத்தில் கடந்த மாதமே கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது நாம் இதை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அதற்காக அப்படியே விட்டுவிடவில்லை. தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உடனடியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

தியாகத்தின் அடையாளம்

தற்போது நாம் 2-ம் கட்டத்தில் உள்ளோம். அடுத்த 3, 4-ம் கட்டத்திற்கு செல்லக்கூடாது. இந்த வைரசுக்கு நாட்டிலேயே முதல் மரணம் கர்நாடகத்தில் நடந்தது. ஆயினும் கடவுளின் கருணையால் இந்த வைரஸ் அதிகம் பரவுவதை தடுத்துள்ளோம். அந்த வைரஸ் பாதித்தவர்கள் வேகமாக குணம் அடைந்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் கர்நாடக அரசு எடுத்துள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த நாேட பாராட்டுகிறது. பிரதமர் மோடியும் பாராட்டினார். இந்த வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த முக்கியமான நேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த சபையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சில காரணத்தால் இங்கு வரவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. நான் பச்சை சால்வையை தோள் மீது போட்டுக்கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதாகவும், வெளியில் காவி சால்வை போட்டுக் கொண்டு சுற்றுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார். காவி நிறம், தியாகத்தின் அடையாளம் என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.

எத்தினஒலே திட்டம்

மத்திய அரசின் 15-வது நிதி குழுவின் பரிந்துரைப்படி கர்நாடகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.11 ஆயிரத்து 887 கோடி குறைவாக கிடைக்கும். இதுகுறித்து மத்திய நிதித்துறை மந்திரியுடன் பேசியுள்ளேன். அதனால் கர்நாடகத்தின் பங்கு முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகம் வளர்ந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. அதனால் நமக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறையை சரிசெய்வதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

மத்திய கர்நாடகத்தில் குடிநீர் தேவைக்காக எத்தினஒலே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பயன் நமக்கும் கிடைக்கும். நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு சரக்கு-சேவை வரி திட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு திட்டம் ஆகியவைதான் முக்கிய காரணம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

காங்கிரஸ் புறக்கணித்தது

இந்த 2 திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு மீது ஒரு கரும்புள்ளி கூட இல்லை. அந்த அளவுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தி செல்கிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

சட்டசபையை உடனே ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நேற்று முன்தினம் வலியுறுத்தியது. இதை மாநில அரசு நிராகரித்துவிட்டதால், நேற்றைய கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்தது.

Next Story