வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு


வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 2020-03-25T00:30:12+05:30)

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலம் சென்று திரும்பியவர்களின் வீடுகளில் சுகாதாரத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்படும் பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலம் சென்று திரும்பும் நபர்கள் சுகாதாரத்துறையின் மருத்துவப் பரிசோதனைக்குப்பிறகு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் அரசின் உத்தரவின்படி அவரவர் வீட்டிலேயே கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்களாலும், வருவாய்த்துறை மற்றும் போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள்.

சட்டப்படி நடவடிக்கை

தமிழக அரசின் உத்தரவின்படி தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுள்ள நாடுகளில் இருந்தோ, வெளிமாநிலங்களில் இருந்தோ வரும் நபர்கள் மற்றும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் 28 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாவார்கள். இதன்படி கரூர் மாவட்டத்தில் 57 பேர் முழு மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் வீடுகளிலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எக்காரணத்தை முன்னிட்டும் சம்பந்தப்பட்ட நபரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. மற்ற நபர்களுடன் கைகுலுக்குதல், அருகில் அமர்ந்து பேசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்துதலுக்கு உள்ளானவர்கள் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மால் பிறருக்கு எந்தவொரு தொற்றும் வந்துவிடக்கூடாது என்ற மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவரின் வீடு என்பதை மற்ற பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி ’கொரோனா தொற்று - உள்ளே நுழையாதே - தனிமைப்படுத்தப்பட்ட வீடு‘ என்ற விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் 57 பேரின் வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி, எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை தனிமைப்படுத்தப்படுகிறார் என்பன குறித்த விவரங்கள் இருக்கும். இது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும். எனவே, கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கட்டுப்பாட்டு அறை

பின்னர் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களை கேட்பதற்கும், கொரோனா குறித்த தகவல்களை தெரிவிப்பதற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு இதுவரை வரப்பெற்ற புகார்கள், தகவல்கள் குறித்து பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், தகவல்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பகுதிகளின் தாசில்தார்களுக்கும், வட்டார மருத்துவ அலுவலருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொறுப்பு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், இங்கு சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 104 என்ற எண்ணிலோ, 04324-1077 என்ற எண்ணிலோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு கொரோனா குறித்த தங்களது சந்தேகங்களை தெரிவிக்கலாம். மேலும், 04324-256306, 04324-255340 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களுக்கும், தங்கள் பகுதியில் வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு சென்று கரூர் மாவட்டத்திற்குள் வருகை தந்த நபர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருந்தால் அவர்கள் குறித்த தகவல்களையும் இந்த எண்களில் தெரிவிக்கலாம். சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் தகவல்களை தெரிவிக்க வேண்டும். தவறான தகவல்களையோ, வதந்திகளையோ தெரிவிக்கும நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Next Story