வாளையாறு சோதனைச்சாவடியில் , கேரளாவை சேர்ந்தவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் வாக்குவாதம்


வாளையாறு சோதனைச்சாவடியில் , கேரளாவை சேர்ந்தவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 24 March 2020 10:15 PM GMT (Updated: 25 March 2020 1:10 AM GMT)

வாளையாறு சோதனைச்சாவடியில் கேரளாவை சேர்ந்தவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் தமிழக- கேரள அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக- கேரள எல்லை மூடப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக- கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி வழியாக கேரளாவை சேர்ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், கேரளாவை சேர்ந்த பொதுமக்களை அழைத்து வரும் ஆம்புலன்ஸ்களை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையில் கேரளாவில் இருந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக வதந்தி கிளம்பியது. இதனால் கேரள போலீசார், கேரள ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் எல்லைப்பகுதியில் குவிந்தனர். இதன் காரணமாக தமிழக -கேரள அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நோய் பரவாமல் இருக்க எல்லை பகுதிகளில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சட்டவிரோதமாக ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் பொதுமக்களை அழைத்து வருவது தண்டனைக்குரியது என்று தமிழக அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் இந்த பிரச்சினை குறித்து பாலக்காடு மாவட்ட கலெக்டரிடமும் தமிழக அதிகாரிகள் புகார் செய்தனர்.

இது குறித்து கேரள அதிகாரிகள் கூறும்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட் டனர். மற்றபடி பொதுமக்கள் யாரும் ஆம்புலன்ஸ்களில் கோவைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றனர்.

Next Story