ரேஷன் கடைகளில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - தாசில்தார்களுக்கு, நெல்லை கலெக்டர் உத்தரவு


ரேஷன் கடைகளில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - தாசில்தார்களுக்கு, நெல்லை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 March 2020 10:45 PM GMT (Updated: 25 March 2020 7:43 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தாசில்தார்களுக்கு, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, கொரோனா வைரஸ் தொடர்பாக தாசில்தார்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ‘வாட்ஸ்-அப்’பில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகம் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காலையில் 100 பேர் வந்தால், அவர்களுக்கு ஒவ்வொரு நேரம் ஒதுக்கி டோக்கன் வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். இதை தாசில்தார்கள் கண்காணிக்க வேண்டும்.

காய்கறி கடைகள் சில இடங்களில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் காய்கறிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுபோல் நெல்லை மாநகராட்சி சார்பிலும் சில கடைகள் உள்ளன. அவர்கள் தான் கடைகளை கண்காணித்து வருகிறார்கள்.

அங்கும் கூட்டம் அதிகம் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் சோப்பு போட்டு கைகழுவ வாஷ்பேஷன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தனியார் மளிகைக்கடையில் கூட்டம் அதிகம் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த மளிகைக்கடைக்காரர் சரியாக கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், அந்த கடையை மூட வேண்டும்.

பத்திரிகைகளில் கூட்டம் அதிகம் இருப்பதாக செய்திகள் வந்தால், சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து அவ்வப்போது தகவல் பெற வேண்டும். இந்த சமயத்தில் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story