நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி
x
தினத்தந்தி 25 March 2020 10:15 PM GMT (Updated: 25 March 2020 7:43 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை சேவியர் காலனி பகுதியை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த 21-ந்தேதி அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் உணவு உட்கொண்டு வருகிறார்‘ என்றார்.

நெல்லை கல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அஷ்ரப்அலி, வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து கொண்டாநகரம் பகுதிக்கு வந்தவர்கள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

மேலப்பாளையத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தெருக்களில் 144 தடை உத்தரவு எதிரொலியாக ஆண்களும், பெண்களும் வெளியே செல்லக்கூடாது என்று ஜமாத் சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் நெல்லை மாநகர பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தச்சநல்லூரில் ஒரு வீட்டில் 20 குழந்தைகளுக்கு ஆசிரியை டியூசன் எடுத்துக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியையை எச்சரித்து அந்த குழந்தைகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story