பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் அருண் தகவல்


பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 26 March 2020 6:08 AM GMT (Updated: 26 March 2020 6:08 AM GMT)

புதுச்சேரி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவைப்பட்டால் பிற துறை அதிகாரிகள் பணிக்கு திரும்ப அழைக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது 8 வெண்டிலேட்டர்கள் வந்துள்ளன. இதில் காரைக்கால், ஏனாமிற்கு தலா ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான மருத்துவ உபகரணங்கள் விரைவில் நமக்கு கிடைக்கும்.

புதுவைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்ப தற்காக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் இணைந்து பொருட்களை கொண்டு வருவதற்கும், கொண்டு செல்வதற்கும் மாவட்ட தொடர்பு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.

புதுச்சேரியில் மளிகை, மருந்து, காய்கறி மற்றும் பழக்கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி திறக்கப்பட்ட 42 கடைகள் மீது இன்று (நேற்று) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story