கோவில்பட்டியில் பயங்கரம்: 2 சிறுமிகள் கிணற்றில் தள்ளி கொலை - கொடூர தந்தை கைது
கோவில்பட்டியில் கடன் தொல்லையில் 2 சிறுமிகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் ரோடு தாமஸ் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் டேவி குமார் (வயது 36). இவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்து கொடுக்கும் தரகராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு ஷைனி ஜெயசத்யா (11), ஜெசிகா ராணி (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். அங்குள்ள பள்ளியில் ஷைனி ஜெயசத்யா 5-ம் வகுப்பும், ஜெசிகா ராணி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் டேவி குமாருக்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கடனை திருப்பி செலுத்த முடியாததால், மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் ஷைனி ஜெயசத்யா, ஜெசிகா ராணி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர்.
தோட்டத்துக்கு அழைத்து சென்று...
நேற்று காலையில் டேவி குமார் தன்னுடைய 2 மகள்களையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக விடுமுறையில் வீட்டில் இருந்த 2 குழந்தைகளும் தந்தையுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அங்குள்ள மெயின் ரோடு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். எனவே, அங்குள்ள ரெயில்வே சுரங் கப்பாதை வழியாக மாற்றுப்பாதையில், கோவில்பட்டி வேலாயுதபுரம்-சாத்தூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு டேவி குமார் 2 மகள்களையும் அழைத்து சென்றார்.
தந்தையுடன் தோட்டத்தில் குளித்து மகிழலாம் என்று கருதிய 2 மகள்களும் உற்சாகமாக சென்றனர். தோட்டத்துக்கு சென்றதும் டேவிகுமார் மனதை கல்லாக்கி கொண்டு தன்னுடைய 2 மகள்களையும் அங்குள்ள கிணற்றில் தள்ளி விட்டார். தானும் அந்த கிணற்றில் குதித்துள்ளார். சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 40 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.
இதனால் தண்ணீரில் தத்தளித்த 2 மகள்களும் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்போது டேவிகுமார் மனம் மாறி குழந்தைகளை காப்பாற்ற முயன்றாராம். ஆனால் அதற்குள் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவர் கிணற்றில் தொங்கிய கயிறை பிடித்து மேலே ஏறிவந்தாராம். பின்னர் தனது நண்பர் ஒருவருக்கு சொல்போனில் தகவலை கூறிவிட்டு, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி விட்டாராம். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளை கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கிணற்றில் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஷைனி ஜெயசத்யாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் ஜெசிகா ராணியின் உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர் கள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 2 மகள்களின் உடல்களைப் பார்த்து தாயார், உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதற்கிடையே, தலைமறைவான டேவி குமாரை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர், தோட்டிலோவன்பட்டி காட்டு பகுதியில் பதுங்கி இருந்த டேவிகுமார் இலுப்பையூரணி கிராம நிர்வாக அதிகாரி அமர்ராஜிடம் சரணடைந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கிழக்கு போலீசாரிடம் கிராம நிர்வாக அதிகாரி ஒப்படைத்தார். பின்னர் அவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் கடன் தொல்லையில், பெற்ற 2 மகள்களையே கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story