மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரம் பகுதியில் 81 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது + "||" + Pavurcattiram area In 81 households Isolation Notice pasted

பாவூர்சத்திரம் பகுதியில் 81 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது

பாவூர்சத்திரம் பகுதியில் 81 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது
பாவூர்சத்திரம் பகுதியில் 81 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தென்காசியில் வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தென்காசி, 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தென்காசியில் பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மற்றும் இறைச்சி, மீன் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலையங்களில் போக்குவரத்து இல்லாததால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் தென்காசி சந்திப்பு ரெயில் நிலையம் அடைக்கப்பட்டதால் அங்கும் யாரும் செல்லவில்லை.

அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்கள் மட்டும் பொருட்களை வாங்கிச் சென்றனர். அந்த இடத்தில் கூட்டம் கூடக்கூடாது என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுத்தனர். நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனம் மற்றும் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, அதனை தடுக்கும் விதம் குறித்தும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டே இருந்தனர். எவ்வளவுதான் அரசு அறிவிப்பு கொடுத்தாலும், அதனையும் மீறி ஏதாவது ஒரு காரணம் கூறி பொதுமக்கள் சாலைக்கு வருகிறார்கள்.

தென்காசி புதிய பஸ் நிலையம், காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்றவற்றில் பொதுமக்கள் வந்தனர். அவர்களை விசாரணை நடத்தி கொரோனா வைரஸ் தாக்குதலின் தீவிரத்தை எடுத்துக்கூறி தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இதேபோல் கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை வழிமறித்து அவர்களிடம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை ஆட்சியர் குணசேகர் தலைமையில் வருவாய் வட்டாட்சியர் அழகப்பராஜா முன்னிலையில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகரசபை சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக ரேஷன் கார்டு கொண்டு வர வேண்டும் என்றும், ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்கள்.


கடையநல்லூர் நகரசபை தினசரி மார்க்கெட்டில் நேற்று காலை முதல் மதியம் வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் போலீசார், அதிகாரிகள் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து வருகிற 31-ந்தேதி வரை கடையநல்லூர் மார்க்கெட் மூடப்படுகிறது என்று மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்த 15 பேருக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மேற்பார்வையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த 15 பேரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று தனிமைப்படுத்துவதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கடையம் ஒன்றியம் மாலிக்நகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஊருக்கு வெளியில் 2 டிரம் வைத்து அதில் மஞ்சள்பொடி கலந்த தண்ணீர் வைத்து உள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்று வருபவர்கள் கை, கால்களை நன்றாக கழுவி விட்டு ஊருக்குள் வரும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சேர்வலாறு பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டு ஊருக்கு வந்தார். ஆனால் அவரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் கோவிலில் படுத்து இருந்தார். விக்கிரமசிங்கபுரம் நகரசபை ஊழியர்கள் விரைந்து சென்று அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடைசியாக கேரளாவில் இருந்து வரும்போது எடுத்த மருத்துவ பரிசோதனை நகலை காண்பித்த பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.