கட்டுப்பாட்டு அறைக்கு வரும் ருசிகர அழைப்புகள்: மது குடித்தால் கொரோனா வராதாமே!


கட்டுப்பாட்டு அறைக்கு வரும் ருசிகர அழைப்புகள்: மது குடித்தால் கொரோனா வராதாமே!
x
தினத்தந்தி 27 March 2020 9:27 AM IST (Updated: 27 March 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் ருசிகர அழைப்புகளில் ஒருவர் “கொரோனாவுக்கு மருந்து உள்ளதாமே.! மது குடித்தால் கொரோனா ஓடிப்போய் விடுவதாக என் நண்பன் சொல்கிறான். அப்படியா சார்? என்றும் கேட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் உடலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வெப்பநிலை அளவிடப்பட்டும், சளி, இருமல் உள்ளதா? என ஆய்வு செய்திட திருச்சி கள்ளிக்குடியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். அப்படி வந்தவர்கள் இதுவரை 483 பேர் ஆவர்.

மேலும் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 141 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஆக மொத்தத்தில் 624 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் குறித்தும், சளி, இருமல் தொந்தரவால் சிரமப்படுபவர்கள், கொரோனா தொற்று பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றுகிறார்களா? என்றும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் 99523 87108. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை இந்த எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் பல்வேறு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் சிலர், தாமாகவே வந்து, சார்... நான் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளேன். நான் என்ன செய்ய வேண்டும்?, எங்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் எந்த வேளையிலும் இருமிக்கொண்டே உள்ளார். எனக்கு அச்சமாக உள்ளது என்றும், அதிக நபர்கள் கூடி நிற்பதாகவும் புகார் கூறுகிறார்கள். கட்டுப்பாட்டு அறைக்கு சில குறும்புக்காரர்கள் அழைத்து கலாய்த்து வருகிறார்கள். கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபர் ஒருவர், ‘ஹலோ, கொரோனா கட்டுப்பாட்டு அறைங்களா?, உடனே எதிர்முனையில் இருக்கும் சுகாதாரப்பணி ஊழியர்கள், ஆமாங்க என்ன தகவல் என்று சொல்லுங்கள் என்றதும், ஒன்றுமில்லை... இது கொரோனா கட்டுப்பாட்டு அறை புகார் எண்தானா? என ‘டெஸ்டு பண்ணி பார்த்தேன்.. அவ்வளவுதான். வைக்கட்டுமா! என இணைப்பை துண்டித்துள்ளார்.

மற்றொரு அழைப்பில் ஒருவர்,“கொரோனாவுக்கு மருந்து உள்ளதாமே.! மது குடித்தால் கொரோனா ஓடிப்போய் விடுவதாக என் நண்பன் சொல்கிறான். அப்படியா சார்? என்றும் கேட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தரப்பில் ஒரு கிராமத்தில் இருந்து பேசிய பெண் ஒருவர், “கொரோனாவுக்கு பயந்து மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டாலும் எங்கள் கிராமத்தில் சந்துக்கடை மூலம் ஒரு குவார்ட்டரை இருமடங்கு விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதை தடுப்பீர்களா? என்பன உள்ளிட்ட பல அழைப்புகள் வருவதாக சுகாதார பணியாளர்கள் குறைப்பட்டு கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மட்டும் 43 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 17 அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளவர்களை பற்றிய புகார் ஆகும்.

Next Story