தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா பரிசோதனை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி,
கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களை, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1200 பேர் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை அந்தந்த பகுதி சுகாதார பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தற்போது புதிதாக ஒரு பட்டியல் அரசிடம் இருந்து வந்துள்ளது. அதிலும் வெளிநாட்டில் இருந்து வந்த பலரது பெயர்கள் உள்ளன. இதில் ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ள சில பெயர்களும், 28 நாட்கள் தனிமையை முடித்த சிலரது பெயர்களும் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 14 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றே முடிவு வந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கொரோனா தனி வார்டில் 2 பேர் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கான ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த முடிவும் விரைவில் வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, கொரோனா வார்டு மற்றும் அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன் ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story