கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.78 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு


கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.78 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 28 March 2020 4:15 AM IST (Updated: 28 March 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங் களை திருடிச்செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில், கடையில் உள்ள மதுபானங் களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு அதன் மேலாண்மை இயக்குனர் நேற்று முன்தினம் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி முனுசாமி நகர் மாந்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள அரசு டாஸ்மாக் கடையின் இரும்பு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் மேலாளரான ராக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துளசிராமனுக்கு(வயது 44) போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீசாரும், கடை நிர்வாகிகளும் நேரில் வந்து ஆய்வு செய்தபோது, டாஸ்மாக் கடையின் இரும்பு கதவு பூட்டுகள் உள்பட மொத்தம் 6 பூட்டுகள் கடப்பாறை கொண்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள 10 பெட்டியில் இருந்த மதுபானங்களை மர்ம கும்பல் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.

முன்னதாக கடையின் வெளிப்புறம் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கடப்பாறை கொண்டு அடித்து நொறுக்கி வீசிவிட்டு தங்கள் துணிகர திருட்டை அரங்கேற்றி உள்ளனர்.

டாஸ்மாக் கடையில் திருடப்பட்ட 10 மதுபான பெட்டிகளையும் கார் அல்லது மினிடெம்போ என ஏதாவது ஒரு நான்கு சக்கர வாகனத்தில் மர்ம கும்பல் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருட்டு சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் இரும்பு கதவுக்கு தற்போது கம்பி வைத்து நிரந்தரமாக வெல்டிங் செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மது பிரியர்கள் பொறுமையை இழந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story