தனிமைப்படுத்தப்படுபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர வாய்ப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நமது மாவட்டத்திலும் கால வரம்பினை சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தாலுகா அளவில் உள்ள வியாபாரிகள் தாலுகாவிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது வாகனங்களுக்கு உதவி கலெக்டர் அலுவலகத்திலும் வாகன ஸ்டிக்கர் பெற்றுக்கொண்டு தங்களது வாகனத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அரசு தெரிவித்துள்ளவாறு அனுமதி அளிக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளபடி, ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ள நேரத்தில் அடையாள அட்டையுடன் உணவு டெலிவரி செய்ய வேண்டும். மொத்த வியாபாரிகள் தங்களது பணியாளர்களை ஒரே வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும். பணியாளர்களுக்கு நிறுவனங்கள் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து நமது மாவட்டத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த 1,621 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே வர முடியாது. இந்த எண்ணிக்கை 2 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சர், முதன்மை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 9 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் களையப்படுவதோடு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு சில்லறை, மொத்த விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை பணிகளுக்காக வெளியே வருவோர் அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது வரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 14 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர்.
பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அத்தியாவசிய பொருட்கள் பெறும் வகையில் வீடு வீடாக வினியோகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய நகரங்களிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) முதல் இந்த பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள், பல்வேறு நிறுவன உரிமையாளர்களுடன் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள், பல்வேறு நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், திரேஸ்புரம், பூபாலராயபுரம் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்குவதை கண்காணிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சாந்திராணி, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், செயற்பொறியாளர் பார்த்திபன், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story