ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க 3 இடங்களில் தற்காலிக மார்க்கெட் - அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு
ஒரே நேரத்தில்புதுச்சேரி பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி, அஜீஸ் நகர் ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்படும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் ஷாஜகான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாநில எல்லை யான கோரிமேடு சென்றார். அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், வெளி மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களின் மீது கிருமி நாசினி தெளித்த பிறகே புதுவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன்பின் லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள பல்நோக்கு கூடத்தில் கொரோனா சிறப்பு வார்டினையும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன் அங்காடிக்கு சென்று காய்கறி கடைகள் அமைப்பதற்கான இடத்தையும், காலாப்பட்டு மாநில எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் காலாப்பட்டு தொகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது அமைச்சருடன், மாவட்ட கலெக்டர் அருண், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அதையடுத்து அமைச்சர் ஷாஜகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1,900-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மாகியில் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டியும் குணமடைந்து விட்டார். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தற்போது யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 90 சதவீதம் மக்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். 10சதவீதம் மக்கள் வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
பெரிய மார்க்கெட்டில் மக்கள் காய்கறிகள் வாங்க கூட்டம், கூட்டமாக வந்து இருந்தனர். எனவே மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க புதிய பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி, அஜீஸ் நகர் ஆகிய 3 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவை உடனடியாக பயன்பாட்டிற்கு வரும். அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். ஒரு சிலர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
புதுவை பஸ் நிலையத்தில் மார்க்கெட் அமைப்பது தொடர்பாக கலெக்டர் அருண், சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப், நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு மாறன், முருகவேல், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story