வாணாபுரம் அருகே, வெளிநாட்டில் இருந்து வந்ததாக அதிகாரிகளை அலைக்கழித்த வாலிபர் - தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார்


வாணாபுரம் அருகே, வெளிநாட்டில் இருந்து வந்ததாக அதிகாரிகளை அலைக்கழித்த வாலிபர் - தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 29 March 2020 10:00 PM GMT (Updated: 30 March 2020 2:54 AM GMT)

வாணாபுரம் அருகே வெளிநாட்டிலிருந்து வந்ததாக கூறி அதிகாரிகளை அலைக்கழித்த வாலிபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

வாணாபுரம்,

வாணாபுரத்தை அடுத்த பேராயம்பட்டு பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில தினங்களாக வருவாய்த்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நான் வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ளேன், என்னை அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்து வந்தார். அதிகாரிகள் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயலும்போது முடியவில்லை. ஆனால் கடந்த 4 நாட்களாக பல்வேறு அதிகாரிகளை அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த நபரை தேடி அலைந்து திரிந்தும் ஏமாற்றமே மிஞ்சியது.

இது குறித்து வாணாபுரம் போலீசார் மற்றும் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை பேராயம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனிமைப்படுத்தி வைத்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Next Story