வேலூரில் சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு செய்யாத காய்கறி கடை உரிமையாளர்கள் உள்பட 15 பேர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை
பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு செய்யாத 7 காய்கறி கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
வேலூர்,
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூட்டமாக நிற்பதால் வைரஸ் தொற்று பரவுவதாகவும் எனவே இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் கடைகள் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று தான் பொருட்களை வாங்குகின்றனர். இதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு கடைக்காரரும் தங்கள் கடைகளுக்கு வரும் பொதுமக்களை இடைவெளி விட்டு நிற்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்த பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் மீன், சிக்கன், மட்டன் என 7 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. எனினும் சமூக இடைவெளி குறித்து பொதுமக்களுக்கும், கடையின் உரிமையாளர்களுக்கும் எந்த வித விழிப்புணர்வும் ஏற்படவில்லை.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்துதான் காய்கறி வாங்குகின்றனர். அவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி வாங்குகின்றனர். இது குறித்து 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் அங்கு சென்று ஆய்வு செய்தார். அதில் 7 கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க எந்த ஏற்பாட்டையும் கடைக்காரர்கள் செய்யவில்லை. அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. எனவே அந்த கடைகள் நடத்த அனுமதி ரத்து செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 7 காய்கறி கடைகளின் உரிமையாளர்கள், வேலை செய்தவர்கள் என 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை வேலூர் தாசில்தார் சரவணமுத்து தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் கொணவட்டம், சத்துவாச்சாரி என பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொணவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 சிக்கன் கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல சத்துவாச்சாரியில் அனுமதியின்றி திறக்கப்பட்டிருந்த பேக்கரி கடைக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story