டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை - 2 பேர் கைது


டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை - 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2020 10:30 PM GMT (Updated: 31 March 2020 4:09 AM GMT)

டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை நேற்று அதிகாலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் திருத் துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுக் கடை சுவரில் மர்மநபர்கள் துளைபோட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மடப்புரம் காலனி தெருவை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (வயது 28), திருச்செல்வம் மகன் முருகேசன் (22) ஆகியோர் உள்பட 3 பேர் மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அஜித்குமார், முருகேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story