நாகை மாவட்டத்தில், கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்


நாகை மாவட்டத்தில், கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
x
தினத்தந்தி 1 April 2020 10:57 AM IST (Updated: 1 April 2020 10:57 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

நாகை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 10 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். 

Next Story