காய்கறி, மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் - கலெக்டர் திவ்யதர்ஷினி எச்சரிக்கை
காய்கறி, மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ராணிப்பேட்டை,
டெல்லியில் நடந்த மாநாட்டில் நமது மாவட்டத்தை சேர்ந்த 52 பேர் பங்கேற்றுள்ளது கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் டெல்லியில் உள்ளனர். மீதமுள்ள 41 பேர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். ஒருவர் மட்டும் செங்கல்பட்டு மருத்துவமனையில் உள்ளார். மாவட்டத்தில் கலவை தாலுகா தவிர மற்ற 5 தாலுகாக்களை சேர்ந்த நபர்கள் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள 41 பேரில் முதல்கட்டமாக 10 நபர்களுக்கு மட்டும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும். மேல்விஷாரத்தில், அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் மூலம் 8,400 வீடுகளில் பரிசோதனை செய்து வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள் சுகாதாரத்துறையினர் மூலம் தினதோறும் செல்போன் வீடியோ கால் மூலம் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மளிகை பொருட்கள், காய்கறி பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்துள்ளன. புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். நியாயவிலை கடைகளுக்கு ரேஷன் பொருட்கள், ரூ.1000 பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.
ஒரு நாளைக்கு 100 ரேசன்கார்டுகளுக்கு வழங்கப்படும். மேல்விஷாரம் நகரில் உள்ள 6 ரேசன் கடைகளை சேர்ந்த குடும்ப அட்டை தாரர்களுக்கு மட்டும் வீடு, வீடாக சென்று ரூ.1,000 மற்றும் பொருட்கள் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு வீட்டிலேயே வந்து கொடுக்கப்படும். 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தபால்காரர் மூலம் 15-ந் தேதிக்குள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் தடை உத்தரவை மீறியதாக நேற்று வரை 662 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 464 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story