பண பரிவர்த்தனைக்காக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதல் - பெண்கள் பணம் எடுக்க தேதி அறிவிப்பு


பண பரிவர்த்தனைக்காக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதல் - பெண்கள் பணம் எடுக்க தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2020 3:45 AM IST (Updated: 3 April 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

பண பரிவர்த்தனைக்காக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. அரியலூரில் பெண்கள் பணம் எடுக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கடந்த வாரங்களில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி காணப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியதால், மாத சம்பளம் பெறும் பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதனை எடுப்பதற்கும், பண பரிவர்த்தனைகளில் ஈடுபடவும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர தொடங்கி உள்ளனர்.

இதனால் நேற்று வங்கிகள் முன்பு வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை வங்கி ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வருமாறும், வங்கிக்குள் ஒருவர் சென்று வந்த பின்னரே, மற்றொரு நபர் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கு தண்ணீர் வசதியும், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வங்கிகள் முன்பு வைக்கப்பட்டிருந்தன.

பெண்களுக்கான பிரதம மந்திரி ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி மாதம் ரூ.500 வீதம் மூன்று மாதங்களுக்கான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அந்த கணக்கில் இருந்து பணம் எடுக்க விரும்புபவர்களுக்கு, அவர்களுடைய வங்கி கணக்கு எண்ணின் கடைசி எண்ணை குறிப்பிட்டு கீழ்கண்டவாறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிகளில் மட்டும் வங்கிக்கு வந்து பணத்தை எடுக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிற நாட்களில் வந்தால் பணத்தை எடுக்க முடியாது.

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண்ணில் கடைசியாக முடியும் எண் 0 அல்லது 1 என்று இருந்தால் இன்றும் (வெள்ளிக்கிழமை), 2 அல்லது 3 என்று இருந்தால் நாளையும் (சனிக்கிழமை), 4 அல்லது 5 என்று இருந்தால் 7-ந் தேதியும், 6 அல்லது 7 என்று இருந்தால் 8-ந் தேதியும், 8 அல்லது 9 என்று இருந்தால் 9-ந் தேதியும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

Next Story