திண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட பல்பொருள் அங்காடி உள்பட 25 கடைகளுக்கு ‘சீல்’ - 130 கிலோ இறைச்சி பறிமுதல்


திண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட பல்பொருள் அங்காடி உள்பட 25 கடைகளுக்கு ‘சீல்’ - 130 கிலோ இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2020 3:45 AM IST (Updated: 6 April 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட பல்பொருள் அங்காடி உள்பட 25 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 130 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட் களுக்கான கடைகள், காய்கறி சந்தைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனாலும் தடையை மீறி திறக்கப்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் உள்ளாட்சி அமைப்பு, உணவு பாதுகாப்புத்துறையினரிடம் பதிவு செய்த இறைச்சி, மீன் கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்ட இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய பதிவு இன்றி இறைச்சி கடைகள் செயல்பட்டதும், பதிவு செய்யப்பட்ட கடைகளில் இறைச்சியை முறையாக பார்சல் செய்து வழங்காமலும், சமூக இடைவெளி இல்லாமலும் இறைச்சி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மொத்தம் 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு 130 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அந்த இறைச்சி மீது கிருமிநாசினி தெளித்து மண்ணுக்குள் புதைத்து அதிகாரிகள் அழித்தனர். இதேபோல் தடையை மீறி செயல்பட்ட பல்பொருள் அங்காடி, ஜிலேபி கடை, டீக்கடை, பேக்கரி உள்பட 15 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 3 இறைச்சி கடைகளை ஆர்.டி.ஓ. (பொறுப்பு)சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இந்த கடைகளில் இருந்து 150 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் வடமதுரையில் ஈ.பி.காலனியை சேர்ந்த பெருமாள்சாமி (45), சத்யாநகரை சேர்ந்த கலீல்ரகுமான் (48) ஆகிய 2 பேர் உரிய அனுமதியின்றி இறைச்சி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story