வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது - கலெக்டர் அதிர்ச்சி தகவல்


வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது - கலெக்டர் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 5 April 2020 10:30 PM GMT (Updated: 6 April 2020 4:54 AM GMT)

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும், 125 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளதாகவும் கலெக்டர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டக்கூடும். ஆனால் மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் 125 மட்டுமே உள்ளது. கூடுதல் எண்ணிக்கையில் வென்டிலேட்டர்கள் கிடைக்கவில்லை. உலகம் முழுவதிலும் இதற்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் அதிக அளவில் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும்போது யாரை காப்பாற்ற வேண்டும், யாரை காப்பாற்ற முடியாது என்கிற நிலை ஏற்படும். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் இருந்து வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் தேவையில்லாமல் வெளியே வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகளின் முன்பாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 1,552 தன்னார்வலர்களை பொதுமக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் காவல்துறைக்கும், மற்றொரு பிரிவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளை அணுகி குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளையும், 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கிக் கொடுப்பார்கள். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக புகைப்பட அடையாள அட்டை, சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் குறித்த தகவல்கள் https://vellore.nic.in என்ற மாவட்ட கலெக்டரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் பட்டியலையும் அதற்கான தொகையையும் வழங்கினால் அவர்களின் வீடுகளுக்கே பொருட்களை கொண்டு வந்து ஒப்படைப்பார்கள். அவர்களுக்கு மக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story