நெல்லை-தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் களையிழந்த பங்குனி உத்திர திருவிழா - பக்தர்கள் இன்றி நடந்த பூஜை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா களையிழந்தது. ஆனால், பக்தர்கள் இன்றி கோவில்களில் பூஜைகள் நடந்தன.
நெல்லை,
அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர்தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா, சாத்தான் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள். குடும்பத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் குல தெய்வமான சாஸ்தாவுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திவிட்டுதான் நிகழ்ச்சியை தொடங்குவார்கள்.
குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பதும், சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும்தான் அதிகம் இருக்கின்றன.
கோவிலில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். மேலும், காவல் தெய்வங்களான கருப்பசாமி, சுடலைமாடசாமி, சங்கிலி பூதத்தார், முண்டசாமி, பேச்சி, தளவாய் மாடசாமி, முன்னோடி மாடசாமி, பலவேசகாரன், பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா ஆகிய பரிவார தெய்வங்கள் இருக்கும். பக்தர்கள் முதலில் சாஸ்தாவுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு, அவருக்கு எதிரே உள்ள காவல் தெய்வங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் இன்றி கோவில் பூசாரிகள் மட்டுமே சென்று சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் பூஜை நடத்தினார்கள். இதனால் பங்குனி உத்திர திருவிழா களையிழந்து காணப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உத்திரத்தன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்புபோட்டு வழிபாடு நடத்துவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள். ஆனால், இந்த ஆண்டு காலை 7 மணிக்குள் அனைத்து சைவ பூஜைகளை மட்டும் செய்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டனர். ஒரு சில பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர்.
குரும்பூர் அருகே மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார்கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், கடம்பாகுளம் பூலுடையார் சாஸ்தா கோவில், கயத்தாறு பூலுடையார் சாஸ்தா கோவில், அய்யனார் சாஸ்தா கோவில், நெல்லை பிராஞ்சேரி கரையடி மாட சுவாமி கோவில், மறுகால்தலை சாஸ்தா கோவில், நெல்லை டவுன் கரும்பனை வீரதர்மசாஸ்தா கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துறை சாஸ்தா கோவில், படப்பக் குறிச்சி குளத்துப்புழை தர்மசாஸ்தா கோவில், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா கோவில், கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், உக்கிரன்கோட்டை அணைத்தலை அய்யனார் தர்மசாஸ்தா கோவில், திப்பணம்பட்டி கைகொண்டார் சாஸ்தா கோவில், கடையம் ராமநதி அருகே உள்ள சூட்சமுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் செண்பக சாஸ்தா கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் திருவிழா நடைபெறாததால் அந்த பகுதி களையிழந்து காணப்பட்டது.
பங்குனி உத்திர திருவிழா அன்று மக்கள் கூட்டத்தில் அலைமோதும் நெல்லை பிராஞ்சேரி கரையடிமாடசுவாமி கோவிலில் காலையில் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டார். கோவிலுக்கு பக்தர்கள் வரக்கூடாது என்று கோவில் மூடப்பட்டது. கோவிலை சுற்றி போலீசார் தடுப்பு வேலி அமைத்து விட்டனர்.
பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லையில் பழம், தேங்காய் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை செய்கின்ற கடைகளும், பூக்கடைகளும் திறந்து இருந்தன. ஆனால், மாலைகளையும், பூஜை சாமான்களையும் வாங்க பக்தர்கள் வரவில்லை.
Related Tags :
Next Story