ராஜபாளையம் அருகே ஊரடங்கின் போது பயங்கரம்: கபடியில் மாநில பதக்கம் வென்ற கல்லூரி மாணவர் கொலை - தி.மு.க. கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது


ராஜபாளையம் அருகே ஊரடங்கின் போது பயங்கரம்: கபடியில் மாநில பதக்கம் வென்ற கல்லூரி மாணவர் கொலை - தி.மு.க. கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2020 4:15 AM IST (Updated: 8 April 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

கபடி போட்டியில் மாநில பதக்கம் வென்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தி.மு.க. யூனியன் கவுன்சிலர், அவருடைய 2 மகன்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தளவாய்புரம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வீரணன். அவருடைய மகன் தாமரைக்கனி (வயது20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் கபடி போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றுள்ளார்.

இதே ஊரை சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன்(45). இவர் ராஜபாளையம் யூனியன் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகன்கள் கணேஷ்குமார் (25), செந்தில்குமார் (23). இவர்கள் இருவரும் சுப காரியங்களுக்கு பேண்ட் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த மாதம் இதே பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சியில் இவர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்த போது இடையே இவர்களின் பெரியப்பா சக்திகணேஷ் மகன் கணபதிசங்கர் (22) என்பவரும் பேண்ட் வாத்தியம் வாசித்து உள்ளார். இதனை பார்த்துக்கொண்டிருந்த தாமரைக்கனி அவர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தோரும் போலீசாரும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனாலும் தாமரைக்கனி மீதான அவர்கள் ஆத்திரம் தீரவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரம் தெப்பக்குளம் அருகே தாமரைக்கனி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டார்.

இதனால் ரத்தவெள்ளத்தில் விழுந்த தாமரைக்கனியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இதனையடுத்து, சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக கணபதிசங்கர், தி.மு.க. கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன், அவரது மகன்கள் கணேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் சக்திகணேஷ், ஜெயகணேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கணேஷ்குமாரும் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story